அலட்சியமாக செயல்படும் நிர்வாகிகளுக்கு கட்சியில் இடம் கிடையாது; குமாரசாமி எச்சரிக்கை
|அலட்சியமாக செயல்படும் நிர்வாகிகளுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இடம் கிடையாது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கட்சியில் இடம் கிடையாது
பெங்களூருவில் உள்ள ஜே.பி.பவனில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில செயற்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, கட்சியின் இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும், கட்சியை வளர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய குமாரசாமி, "கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபடாமல் அலட்சியமாக செயல்படும் நிர்வாகிகளுக்கு கட்சியில் இடம் கிடையாது. இது தேர்தல் ஆண்டு ஆகும். எனவே கட்சியை வளர்க்கும் பணிகளில் நிர்வாகிகள் அலட்சியம் காட்டினால், அதனை சகித்து கொள்ள முடியாது. வெறும் பழைய மைசூரு பகுதிகளில் மட்டும் கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல், வடகர்நாடக மாவட்டங்கள், கல்யாண கர்நாடக மாவட்டங்களிலும் நமது கட்சியை வளர்க்க ஒவ்வொரு நிர்வாகிகளும் முன்வர வேண்டும்" என்றார்.
பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்
பின்னர் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் பேசுகையில், "கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருக்கும் நிர்வாகிகள் மீது பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். தேவைப்பட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஏனெனில் அடுத்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவதற்கு, கட்சியை வளர்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டால் மட்டுமே, நமது குறிக்கோளை அடைய முடியும்.
நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கட்சியை வளர்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இல்லையெனில் பதவியை புதியவர்களுக்கு பதவியை விட்டு கொடுக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் நாம் ஆட்சிக்கு வருவது உறுதி. அதனை மனதில் வைத்து கொண்டு, நிர்வாகிகள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். மாதத்தில் 15 நாட்களாவது நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச வேண்டும்" என்றார்.