'யாரிடம் இருந்தும் அழைப்பு வரவில்லை..' - பா.ஜ.க. கூட்டணி குறித்த கேள்விக்கு குமாரசாமி பதில்
|பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் யோசனை இல்லை என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி வைக்கப்போவதாக வெளியான தகவல்களை அக்கட்சியின் தலைவர் குமாரசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், "கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. எனும் இரு தேசிய கட்சிகளுக்கும் எதிராகத்தான் எங்கள் கட்சி இருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இரு கட்சிகளையும் எதிர்த்துத்தான் தேர்தலை எதிர்கொண்டோம். ஆனால், திடீரென மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. யார் இவ்வாறு பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க.வோடு மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைக்குமா என கேட்கிறீர்கள். தற்போதைய நிலையில் அதுபோன்ற எந்த யோசனையும் எங்களுக்குக் கிடையாது. யாரிடம் இருந்தும் எங்களுக்கும் அழைப்பு வரவில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே நாங்கள் இரண்டு தேசிய கட்சிகளையும் எதிர்த்துத்தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். தற்போதும் அது அப்படியேதான் தொடருகிறது" என தெரிவித்தார்.