இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு இல்லை; மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சொல்கிறார்
|மீட்டர் பிரச்சினைகளால் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாகவும், கிரகஜோதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றும் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
மீட்டர் பிரச்சினைகளால் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாகவும், கிரகஜோதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றும் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ஆய்வு
பெங்களூரு எலகங்காவில் உள்ள மின் உற்பத்தி மையத்தை பி.எச்.இ.எல். நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அந்த மின் உற்பத்தி மையத்தில் கடந்த ஆண்டு(2022) தீ விபத்து நடைபெற்றிருந்ததால் மின் உற்பத்தி தடைபட்டு இருந்தது. இதையடுத்து, அந்த மின் உற்பத்தி மையத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க தேவையான நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வருகிறது.
இதையடுத்து, எலகங்காவில் உள்ள மின் உற்பத்தி மையத்திற்கு நேற்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்த மின் உற்பத்தி மையத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைளை எடுக்கும்படியும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
2 மாதத்திற்கு சேர்த்து...
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த ஏப்ரல் மாதமே மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. பின்னர் கடந்த மாதம்(மே) 12-ந்தேதி மின் கட்டண உயர்வை அமல்படுத்தி இருந்தது. முன் தேதியிட்டு கட்டணத்தை உயர்த்தியதால் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கும் சேர்த்து தற்போது மின் கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டிய உள்ளது.
அதனால் தான் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த கட்டண உயர்வை அமல்படுத்தவில்லை. ஒட்டு மொத்தமாக 2 மாதத்திற்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால், கட்டணம் அதிகமாகி இருக்கிறது. அதே நேரத்தில் வீடுகளில் இருக்கும் மின்மீட்டர்கள் பழுதாகி இருந்தது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாகவும் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காலக்கெடு இல்லை
பெஸ்காம் மின்வாரியத்தில் பயன்படுத்தப்படும் மென்பொருள் 12 ஆண்டுகள் பழமையானதாகும். அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 முதல் 12 நாட்கள் தேவைப்படும். அந்த நாட்களில் மின் இணைப்பு வழங்க முடியாத காரணத்தால், அந்த பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. தற்போது இருக்கும் மென்பொருளை எந்த விதமான பிரச்சினையும் இன்றி மாற்றுவதற்காக சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கிரகஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிக்க கடந்த 18-ந் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சர்வர் தடை உள்ளிட்ட சில காரணங்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும், 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் பயன் பெறுவதற்கு விண்ணப்பிக்க எந்த விதமான காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை. இதன்மூலம் மக்கள் எந்த நேரத்திலும் விண்ணப்பித்து இலவச மின்சாரத்தை பெற்று கொள்ள முடியும். மக்கள் ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.