< Back
தேசிய செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம் உலக தரத்திற்கு ஒப்பானது:   இந்திய வானிலை  மையம் விளக்கம்
தேசிய செய்திகள்

சென்னை வானிலை ஆய்வு மையம் உலக தரத்திற்கு ஒப்பானது: இந்திய வானிலை மையம் விளக்கம்

தினத்தந்தி
|
23 Dec 2023 9:29 PM IST

தென்மாவட்டத்தில் பெய்த பெருமழையை துல்லியமாக கணிக்க வானிலை ஆய்வு மையம் தவறிவிட்டதாக தமிழக அரசு விமர்சித்து இருந்தது.

சென்னை,

தென் மாவட்ட மழைவெள்ள பாதிப்புக்கு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மீது தமிழ்நாடு அரசு குறை கூறியது. இதைத்தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமர்சனங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அளித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் சமீப காலமாக வெளியாகி வருகிறது.இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள்,ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் உலகத்தரத்துக்கு ஒப்பானவை.

சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன.குறிப்பாக சென்னை வானிலையை கண்காணிக்க 2 டாப்ளர் ரேடார்களும்,தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.இதில் 'எக்ஸ் பேண்ட்' வகை ரேடார் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு, நிறுவப்பட்டது ஆகும்.

இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுனர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார்கள்.இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிகை ஏற்பாடுகள் உலக தரம் வாய்ந்தது என்று உலக வானிலை அமைப்பு பாராட்டி உள்ளது.வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள்,அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும்,நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. இத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்