பெல்தங்கடியில் மளிகை கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு
|பெல்தங்கடியில் மளிகை கடையில் ரூ.50 ஆயிரம் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா சோமந்தடுக்கா பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இதுகுறித்து பிரசன்னா பெல்தங்கடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பெல்தங்கடி போலீசார், குருவாயனகரே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தாா். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா நிட்டே பகுதியை சேர்ந்த சுரேஷ்பூஜாரி (வயது35) என்பதும், அவர் பிரசன்னாவின் மளிகை கடையில் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் சுரேஷ்பூஜாரியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுரேஷ்பூஜாரி 2 மாதங்களுக்கு முன்பு தான் குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.