< Back
தேசிய செய்திகள்
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை
தேசிய செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை

தினத்தந்தி
|
24 Aug 2023 3:22 AM IST

சீனிவாசப்பூர் டவுனில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சீனிவாசப்பூர்:

சீனிவாசப்பூர் டவுனில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பாரத ஸ்டேட் வங்கி

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் டவுன் சிந்தாமணி சர்க்கிள் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளி யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஏ.டி.எம். மையத்திற்கு மர்ம நபர்கள் வந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மீது ஸ்பிரே அடித்தும், கருப்பு பெயிண்ட் பூசியும் அவற்றின் லென்சுகளை மறைத்தனர்.

பின்னர் அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை நவீன கருவிகள் கொண்டு உடைத்தனர். அதாவது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தால் அங்குள்ள அலாரம் ஒலிக்கும்படி வங்கி அதிகாரிகள் செய்து வைத்திருந்தனர். ஆனால் மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும்போது அங்கிருந்த அலாரம் ஒலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரூ.11 லட்சம் கொள்ளை

இதையடுத்து மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணப்பெட்டகத்தை திறந்து அதில் இருந்த ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். நேற்று அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி சீனிவாசப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயண், போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

பின்னர் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. அதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்