அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு: திருச்சியை சேர்ந்த 5 பேர் கைது
|ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது.
புதுடெல்லி,
உலக பணக்காரர்களில் ஒருவரான பிரபல இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் பிரபல தொழில் அதிபர் விரேன் மெர்சென்டின் மகளான ராதிகாவிற்கும் ஜூலை மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமணத்துக்கு முந்தைய வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழில்அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வின்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக திருச்சியை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பானி இல்ல திருமணத்திற்கு வந்திருந்தவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம், லேப்டாப் போன்றவை திருடப்பட்டதாக கூறப்பட்டது. திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 5 பேரை டெல்லியில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.