பிரபல நிறுவனத்தின் சார்ஜர்களை திருடிய தனியார் கூரியர் நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது
|குஷால்நகரில் பிரபல செல்போன் நிறுவனத்தின் சார்ஜர்களை திருடி வந்த தனியார் கூரியர் நிறுவன ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடகு:
குஷால்நகரில் பிரபல செல்போன் நிறுவனத்தின் சார்ஜர்களை திருடி வந்த தனியார் கூரியர் நிறுவன ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செல்போன் சார்ஜர்
குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிரபல தனியார் நிறுவனத்தின் சார்ஜர்களை சிலர் ஆன்லைன் மூலம் வாங்கி, அதை திரும்ப வழங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும் அந்த நிறுவனத்திற்கு அசல் சார்ஜர்கள் அல்லாமல், போலி சார்ஜர்களை அனுப்பி வைத்து வந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாசன் குடோன் பகுதியில் இருந்து குடகு மாவட்டத்திற்கு சார்ஜர் பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை வாங்கிய குஷால்நகர் கூரியர் நிறுவனம், திரும்ப அனுப்புவதாக கூறி அந்த சார்ஜர்களை அனுப்பி வைத்தனர். அந்த சார்ஜர்கள் போலியானது என்று தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவு அதிகாரியான யஸ்வந்த் என்பவர் குஷால்நகர் போலீசில் புகார் அளித்தார்.
5 பேர் கைது
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவலின் பேரில் தனியார் கூரியர் நிறுவனத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியை சேர்ந்த ஹித்தேஷ் ராய், குஷால்நகரை சேர்ந்த எஸ்.ஆர்.தர்மா, ரங்கசமுத்திரா கிராமத்தைச் சேர்ந்த எம்.டி.கீர்த்தன், சரங்காலாவை சேர்ந்த எஸ்.ஆர்.வினய் என்று தெரியவந்தது. அவர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வரும் சார்ஜர் பார்சல்களை நூதன முறையில் திறந்து அசல் சார்ஜர்களை திருடிக்கொண்டு, போலியை அதில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.
பின்னர் வாடிக்கையாளர்கள் அதை சரியில்லை என்று திரும்ப ஒப்படைக்கும்போது, அதை அப்படியே அந்த நிறுவனத்திற்கு அனுப்பி மோசடி செய்து வந்தார்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் ரொக்கம், ரூ.73 ஆயிரம் மதிப்பிலான அசல் செல்போன் சார்ஜர்கள், 16 பாக்சில் இருந்த போலி சார்ஜர்கள், 3 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.