புத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்து தொழில் அதிபர் சாவு
|புத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனால் துப்பாக்கியால் சுட்ட தொழில் அதிபர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சிவமொக்கா:
புத்தாண்டு கொண்டாட்டம்
சிவமொக்கா (மாவட்டம்) டவுன் பி.எச்.சாலை வித்யாநகர் பகுதியில் வசித்து வந்தவர் மஞ்சுநாத் ஹோலிகர். இவர் அப்பகுதியில் கண்ணாடி விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் பல தொழில்களை இவர் செய்து வருகிறார். தொழில் அதிபரான இவர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை தனது வீட்டின் 3-வது மாடியில் உள்ள கண்ணாடி மாளிகையில் வைத்து குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடுவது வழக்கமாம்.
அந்த சந்தர்ப்பத்தில் அவர் தன்னிடம் உள்ள துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுடுவாராம். இதையடுத்து அங்கு குவிந்த அனைவரும் ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்பார்களாம். அதுபோல் நேற்று முன்தினம் இரவும் இவரது வீட்டின் மாடியில் உள்ள கண்ணாடி மாளிகையில் புத்தாண்டை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வானத்தை நோக்கி துப்பாக்கியால்...
இதையடுத்து நள்ளிரவில் மஞ்சுநாத் ஹோலிகர், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மஞ்சுநாத் ஹோலிகருடைய மகன் சந்தீப்பின் நண்பன் வினய் (வயது 34) என்பவரும் கலந்து கொண்டார். புத்தாண்டு பிறந்தவுடன் மஞ்சுநாத் ஹோலிகர் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வழக்கம்போல் தனது நாட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக தவறுதலாக துப்பாக்கி குண்டு சந்தீப்பின் நண்பன் வினயின் வயிற்றில் பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மயங்கி விழுந்து சாவு
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு தன்னுடைய செயல்தான் காரணம் என்று நினைத்த மஞ்சுநாத் ஹோலிகர் மனமுடைந்து இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் கண்ணாடி மாளிகையிலேயே மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மஞ்சுநாத் ஹோலிகரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சோகத்தில் மூழ்கினர்
இதனால் புத்தாண்டை கொண்டாட திரண்ட அனைவரும் சோகத்தில் மூழ்கினர். அந்த வீடே துக்க வீடாக மாறியது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.