கார் ஓட்டிச் சென்றபோது இன்டிகேட்டரை தவறாக போட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
|காரை ஓட்டியபடியே செல்போனில் வீடியோவில் பேசி தனக்கு உதவி செய்யும்படி இளம்பெண் கூச்சலிட்டார்.
பெங்களூரு,
பெங்களூரு பேகூர் பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மடிவாளாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு இளம்பெண் காரில் சென்றார். அவருடன் மற்றொரு பெண்ணும் வந்திருந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு இளம்பெண் உள்பட 2 பேரும் மடிவாளாவில் இருந்து பேகூருவில் உள்ள தங்களது வீட்டுக்கு புறப்பட்டனர்.
இரவு 9.15 மணியளவில் மடிவாளா சுரங்கப்பாதையில் கார் வரும் போது இடதுபுறமாக திரும்புவதாக இன்டிகேட்டரை ஆன் செய்துவிட்டு, அந்த இளம்பெண் காரை வலது புறமாக ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. இன்டிகேட்டரை தவறாக போட்டதால் காருக்கு பின்னால் ஸ்கூட்டரில் வந்த 3 வாலிபர்கள் தடுமாற்றம் அடைந்தனர்.
இதனால் காரில் சென்ற இளம்பெண்ணிடம் ஸ்கூட்டரில் சென்ற வாலிபர்கள் சண்டை போட முயன்றுள்ளனர். உடனே அந்த இளம்பெண் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் 3 வாலிபர்களும் விடாமல் தங்களது ஸ்கூட்டரில் இளம்பெண்ணின் காரை விரட்டி சென்றுள்ளனர். மடிவாளா சுரங்கப்பாதையில் இருந்து கோரமங்களா 5-வது பிளாக் வரை 2 கிலோ மீட்டர் தூரம் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்று பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், காரை ஓட்டியபடியே இதனை செல்போனில் வீடியோவில் பேசி தனக்கு உதவி செய்யும்படி கூச்சலிட்டார்.
அத்துடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் அந்த இளம்பெண் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மடிவாளா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதற்கிடையில், கோரமங்களா 5-வது பிளாக்கில் வைத்து காரை மடக்கிய 3 பேரும், காரின் கதவை திறக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அந்த சமயத்தில் தகவல் அறிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் 3 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் கைது செய்து மடிவாளா போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சேஷாத்திரிபுரத்தை சேர்ந்த ஜெகன்நாத் மற்றும் தேஜஸ் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபரின் பெயர் கண்ணன் என்பதாகும். அதே நேரத்தில் தங்களது ஸ்கூட்டர் மீது இளம்பெண்ணின் கார் மோதியதால், அவரை துரத்தி சென்றதாக 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் ஸ்கூட்டர் மீது கார் மோதியதற்கான தடயங்கள் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
காரின் இன்டிகேட்டரை தவறுதலாக போட்டதால் ஸ்கூட்டரில் துரத்தி சென்று இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான தேஜஸ், ஜெகன்நாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அவர்களிடம் இருந்து ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.