தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்; வாழை மரம், காபி செடிகள் நாசம்
|குஷால்நகர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்து வாழை மரம், காபி செடிகள் நாசபடுத்தியது.
குடகு;
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா சுண்டிகொப்பா அருகே ஒசக்கோட்டை கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் ஒசக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக காட்டு யானைகள், தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்திவிட்டு செல்கிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று இரைதேடி ஒசக்கோட்டை கிராமத்திற்குள் புகுந்தது.
பின்னர் காட்டுயானை, அதேகிராமத்தை சேர்ந்த அன்னய்யா என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை முறித்துபோட்டும், காபி செடிகளை காலால் மிதித்து நாசப்படுத்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
வாழை மரம், காபி செடிகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். இதையடுத்து கிராம மக்கள், வனத்துறையினரிடம் காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.