மாடியில் அந்தரத்தில் தொங்கிய மனைவி.. காப்பாற்ற கணவன் முயன்றும் கீழே விழுந்த பரிதாபம்
|கீழே விழுந்த இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கனகநகரை சேர்ந்தவர் ரூபா (வயது 27). இவர் தனது கணவருடன் தான் தங்கியிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பேசி கொண்டிருந்தார். இந்த கட்டிடம் 2 மாடிகளை கொண்டதாகும்.
இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக மாடியில் கிடந்த சோப்பில் ரூபா கால் வைத்ததாக தெரிகிறது. இதனால் கால் வழுக்கி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தார். உடனே சுதாரித்து கொண்ட அவரது கணவர், மனைவி ரூபாவின் கைகளை பிடித்து கொண்டார். இதனால் ரூபா, மொட்டை மாடியில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார்.
மேலும் அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். சிறிது நேரத்தில் அவரது கை நழுவி ரூபா கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரூபா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் உடனடியாக அங்கிருந்தவர்கள் ரூபாவை மீட்டு பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கோமா நிலையில் ரூபா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே ரூபா மொட்டை மாடியில் இருந்து தவறி விழுவது மற்றும் அந்தரத்தில் தொங்குவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.