நீதிக்கு வந்த சோதனை... பலாத்கார வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நீதிபதி
|இந்த சம்பவம் பற்றி விசாரிக்க மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
அகர்தலா,
திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவரை கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து, மிரட்டி 26 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றிய புகாரை தொடர்ந்து, கடந்த 16-ந்தேதி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளிக்க வரும்படி அந்த பெண்ணிடம் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இளம்பெண்ணை அந்த நீதிபதியே பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார். இந்த கொடூர சம்பவம் பற்றி அந்த பெண் கூறும்போது, நான் வாக்குமூலம் அளிக்க வரும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
இதன்படி, முதல்தர ஜுடிசியல் மாஜிஸ்திரேட் அறைக்கு சென்றேன். நான் சென்றதும், அவருடைய அறைக்குள் தனியாக செல்லும்படி நீதிபதி என்னை கேட்டு கொண்டார். பெண் போலீசாரை அறைக்கு வெளியே இருக்கும்படி கூறினார்.
இதன்பின் கதவை சாத்திய நீதிபதி, எனக்கு என்ன நடந்தது என கூறும்படி கேட்டு கொண்டார். நான் வாக்குமூலம் அளித்தேன். அப்போது அவர் என்னை எழுந்து நிற்கும்படி கூறினார். பின்னர், சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டார் என கூறியுள்ளார்.
இதுபற்றி அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்திருக்கிறார். அவர், நான் ஒரு தினக்கூலி. ஒரு நீதிபதியே எங்களை தவறாக நடத்தினால், மக்கள் எப்படி நீதி பெற முடியும்? என வேதனை தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.