நாட்டின் முதல் 3 பணக்கார எம்.எல்.ஏ.க்கள் இந்த மாநிலத்தில்...! ஓர் அலசல் ரிப்போர்ட்
|இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு ரூ.1,400 கோடியாகவும், மேற்கு வங்காள எம்.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரத்திற்கு குறைவாகவும் உள்ளது.
பெங்களூரு,
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு எனப்படும் ஓர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சமீபத்தில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரியான டி.கே. சிவக்குமாரிடம் ரூ.1,413 கோடி சொத்துகள் உள்ளன.
அவருக்கு அடுத்து 2 பணக்கார எம்.எல்.ஏ.க்களும் கர்நாடகாவை சேர்ந்தவர்களே ஆவர். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பவர் புட்டசாமி கவுடா. சுயேச்சை எம்.எல்.ஏ.வான இவருக்கு ரூ.1,267 கோடி சொத்துகள் உள்ளன.
அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரியா கிருஷ்ணாவிடம் ரூ.1,156 கோடி சொத்துகள் உள்ளன. டாப் 10-ல் 4 பணக்கார எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியினர். 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்.
எனினும், மிக குறைவான சொத்துகளை கொண்ட எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மேற்கு வங்காள பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான நிர்மல் குமார் தாராவிடம் மொத்தம் ரூ.1,700-க்கு குறைவான சொத்துகளே உள்ளன.
அவரை தொடர்ந்து ஒடிசாவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மகரந்த முதுலியிடம் ரூ.15 ஆயிரமும் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரீந்தர் பால் சிங் சாவ்னா என்பவரிடம் ரூ.18,370 சொத்துகளே உள்ளன.
நாட்டின் 20 பணக்கார எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் கர்நாடகாவில் உள்ளனர். தவிரவும் கர்நாடகாவில் 14 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள், குறைந்தது ரூ.100 கோடி என்ற அளவிலான சொத்துகளுடன் கோடீசுவரர்களாக உள்ளனர்.
இந்த பட்டியலில் அருணாசல பிரதேசம் 2-வது இடம் பிடித்து உள்ளது. மொத்தம் 59 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் கோடீசுவரர்களாக உள்ளனர். இது 7 சதவீதம் ஆகும்.