< Back
தேசிய செய்திகள்
பசுமாட்டை அடித்து கொன்ற புலி ; கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை
தேசிய செய்திகள்

பசுமாட்டை அடித்து கொன்ற புலி ; கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
23 Jun 2022 9:23 PM IST

விராஜ்பேட்டை அருகே பாலிபெட்டா கிராமத்திற்குள் புலி ஒன்று புகுந்து பசுமாட்டை வேட்டையாடி கொன்றது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்ககோரி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

குடகு;

புலிகள் அட்டகாசம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலிபெட்டா கிராமம் துபாரே வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து பாலிபெட்டா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் காபித்தோட்டத்திற்குள் புகுந்து தொழிலாளிகளை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் வனவிலங்குகள் பீதியில் தோட்டத்திற்கு செல்லவே அஞ்சுகின்றனர்.

பசுமாட்டை அடித்து கொன்றது

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று இரைதேடி பாலிபெட்டா கிராமத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் புலி, வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை அடித்து கொன்றுள்ளது. பின்னர் மாட்டின் பாதி இறைச்சியை தின்றுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது.

நேற்று காலை பசுமாடு ரத்த காயங்களுடன் பாதி உடலுடன் செத்து கிடப்பதையும், அருகே புலி கால்தடங்கள் இருப்பதையும் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.


நடவடிக்கை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அதில் பசுமாட்டை, புலி அடித்து கொன்றது உறுதியானது. இதைதொடர்ந்து கிராம மக்கள், வனத்துறையினரிடம் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நிவாரணம் வழங்கும்படி கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனாலும் கிராம மக்கள் புலி பீதியில் இருந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்