< Back
தேசிய செய்திகள்
நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை திரும்ப பெற்றது தமிழக அரசு
தேசிய செய்திகள்

நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை திரும்ப பெற்றது தமிழக அரசு

தினத்தந்தி
|
24 Feb 2023 12:47 PM IST

நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்ப பெற தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்ப பெற தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2017-18 ம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அது ஜனாதிபதியின் பரிசீலனையில் இருப்பதை சுட்டிக்காட்டி ரிட் மனு மீதான விசாரணையை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு இந்த விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்பொழுது தமிழ்நாடு அரசு சார்பில் ரிட் மனுவை திரும்ப பெறக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீங்கள் எப்படி ரிட் மனுவை தாக்கல் செய்தீர்கள்? இந்த யோசனையை அளித்தது யார்? என்று கேட்டபோது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல், இந்த ரிட் மனுவானது கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். எந்த ஆட்சியில் இருந்தாலும் இந்த ரிட் மனு எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என நீதிபதிகள் கேட்டபோது, கல்வி என்பது பொது பட்டியலில் இருப்பதால், இதுபோன்ற ரிட் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று அவர் பதில் அளித்தார்.

மேலும் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக புதிய வழக்கு என்பது பிப்ரவரி 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், இந்த ரிட் மனுவை நாங்கள் திரும்ப பெற அனுமதிக்க வேண்டுமென்று என்று தெரிவித்தார். இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்தை எதிர்த்த ரிட் மனுவை திரும்ப பெற அனுமதி அளித்துள்ளது.

மேலும் செய்திகள்