மேகதாது அணையை தமிழகம் ஏற்கும் காலம் வரும்: டி.கே.சிவக்குமார்
|கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூர்,
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தி.மு.க. நேற்று வெளியிட்டது. அதில், மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே. சிவக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து டி.கே.சிவக்குமார் கூறுகையில், ‛‛அரசியல் காரணங்களுக்காக தி.மு.க. செயல்படுகிறது. நான் கர்நாடகாவில் நீர்ப்பாசனத்துறையை பெற்றிருப்பதே மேகதாது அணையை கட்டுவதற்காகத்தான். கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம், காவிரி ஆணையம் முன்பு இது தொடர்பான வழக்குகள் வர உள்ளது. அதில் நியாயம் கிடைக்கும். அனைத்து நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேகதாது அணையை தமிழகம் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்'' என்றார்.