வி.வி.பாட் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
|தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நாடு முழுவதும் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்கினை வி.வி.பாட் மூலம் சரிபார்க்க முடியும். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வி.வி.பாட் சீட்டுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேலும் வி.வி.பாட் இயந்திரத்தில் உள்ள கண்ணாடியை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ஒளிபுகா கண்ணாடியை வைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது , தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதில் ,
இவிஎம்.(மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்) , வி.வி.பாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், இவிஎம், வி.வி.பாட் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட இயந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும், கண்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் வி.வி.பாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன. இவற்றை தாமாக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மனுதாரர் தரப்பில், மைக்ரோ கண்ட்ரோல் யூனிட் பிளாஷ் மெமரியை கொண்டுள்ளதால் மீண்டும் புரோகிராம் எழுத முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.வி.வி.பாட்டில் பிளாஷ் மெமரி இருக்கும்போது முறைகேடு செய்வதற்கான புரோகிராம் இருக்க முடியும். என வாதாடப்பட்டது. இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.