அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், தமிழகத்தில் ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனம், பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு சேஷம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புகளை கட்டாயம் பின்பற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், பி.வள்ளியப்பன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஏன் ரிட் மனு தாக்கல் செய்தீர்கள் என மனுதாரர்களிடம் கேட்டனர்.
அதற்கு வக்கீல் குரு கிருஷ்ணகுமார், சேஷம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்திலும் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளோம் என பதில் அளித்து வாதிட்டார்.
வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை அக்டோபருக்கு தள்ளிவைத்தனர்.