< Back
தேசிய செய்திகள்
சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினரால் கடும் கோபம் அடைந்த சபாநாயகர்; ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது என ஆவேசம்
தேசிய செய்திகள்

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினரால் கடும் கோபம் அடைந்த சபாநாயகர்; 'ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது' என ஆவேசம்

தினத்தந்தி
|
15 Sept 2022 4:21 AM IST

சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினரால் சபாநாயகர் காகேரி கடும் கோபம் அடைந்தார். மேலும் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது என்றும் ஆவேசமாக கூறினார்.

பெங்களூரு:

சபாநாயகர் கடும் கோபம்

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிவடைந்ததும், வெள்ள சேதங்கள் குறித்த விவாதத்திற்கு சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் காணேஷ் எழுந்து, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக பேச அனுமதி வழங்குமாறு கோரினார்.

அதனால் கடும் கோபம் அடைந்த சபாநாயகர் காகேரி, 'சபையில் ஒரு பிரச்சினையை எழுப்ப வேண்டுமென்றால் முன்கூட்டியே என்னிடம் கடிதம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். எந்த அனுமதியும் பெறாமல் திடீரென எழுந்து ஒரு விஷயத்தை முன்வைத்து பேசுவது சரியல்ல. சபையின் விதிமுறைகள் என்ன என்பதை உறுப்பினர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இஷ்டம் போல் எழுந்து பேசினால் நான் சபையை எப்படி நடத்துவது. இந்த சபைக்கு என்று கண்ணியம், கவுரவம் உள்ளது. இதை உறுப்பினர்கள் அனைவரும் காக்க வேண்டும்' என்றார்.

ஏற்க முடியாது

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் காணேஷ் உள்பட 5-க்கும் மேற்பட்டோர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கும் சபாநாயகர் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். சபை உறுப்பினர்கள் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது என்று ஆவேசமாக கூறினார்.

அதைத்தொடர்ந்து சித்தராமையா பேசுகையில், 'கர்நாடகத்தில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி ஒரு மடாதிபதி கடந்த 208 நாட்களாக பெங்களூரு சுதந்திர பூங்காவில் இரவு-பகலாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். நானும் அவரை 2 முறை சந்தித்து பேசினேன். இந்த விஷயத்தில் கர்நாடக அரசு விரைவாக முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க அரை மணி நேரம் ஒதுக்க வேண்டும்' என்றார்.

இருக்கைக்கு திரும்பினர்

அதைத்தொடர்ந்து பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 'பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து அரை மணி நேர விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கலாம். இந்த விஷயத்தில் அனைத்துக்கட்சியினரின் கருத்துகளையும் கேட்டு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை கைவிட்டு இருக்கைக்கு திரும்பினர்.

மேலும் செய்திகள்