கேரளாவில் அடுத்த 2-3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை மையம் கணிப்பு
|கேரளாவில் அடுத்த 2-3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதுடெல்லி,
தென்மேற்குப் பருவமழை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் கேரளாவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விவசாயத்திற்கு முக்கிய உயிர்நாடியாக விளங்கும் இந்த பருவமழை மந்தமான தொடங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதில் தற்போது 2-3 நாட்கள் தாமதமாகியுள்ளது.
சமீபத்திய வானிலை அறிகுறிகளின்படி, தெற்கு அரபிக்கடலில் மேற்குக் காற்று கீழடுக்கில் வலுப்பெற்று ஆழ்ந்துள்ளது. செயற்கைக்கோள் படங்களின்படி, கேரளா கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, அடுத்த 2-3 நாட்களில் கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் இடியுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யும் என்றும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தால் பரவலாக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.