< Back
தேசிய செய்திகள்
ஒற்றை காட்டுயானை தொடர் அட்டகாசம்
தேசிய செய்திகள்

ஒற்றை காட்டுயானை தொடர் அட்டகாசம்

தினத்தந்தி
|
30 July 2023 12:15 AM IST

மூடிகெரே அருகே ஒற்றை காட்டுயானை தொடர் அட்டகாசத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பாக்கு, மிளகு, காபி செடிகளை மிதித்து நாசப்படுத்தியது.

சிக்கமகளூரு:-

காட்டுயானை அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பைதுவள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகுந்து விளைபயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. சில நேரங்களில் வீடுகளில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பீதியடைந்துள்ள கிராம மக்கள் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதன்படி நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 காட்டுயானைகளை பிடித்தனர். இருப்பினும் காட்டுயானைகளின் நடமாட்டத்தை முழுமையாக குறைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சிலநாட்களாக பைதுவள்ளி கிராமத்தில் ஒற்றை காட்டுயானை ஒன்று, அட்டகாசம் செய்து வருகின்றது. கிராமத்திற்குள் புகுந்து இந்த காட்டுயானை விளை பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் உருபேகே கிராமத்தை சேர்ந்த அர்ஜூன் என்பவரின் தோட்டத்திற்குள் இந்த ஒற்றை காட்டுயானை புகுந்தது.

காபி, மிளகு செடிகள் நாசம்

பின்னர் அந்த காட்டுயானை அங்கிருந்த மிளகு, காபி செடிகளை மிதித்து நாசப்படுத்தியதுடன், பாக்குமரங்களையும் முறித்துஎரிந்துவிட்டு சென்றது. நேற்று காலை இதை பார்த்த அர்ஜூன், இதுகுறித்து மூடிகெரே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அர்ஜூன், காட்டுயானை சுமார் ஒன்றரை ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த, மிளகு, காபி செடிகள் மற்றும் பாக்குமரங்களை நாசப்படுத்தியதாக கூறினார்.

இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒற்றை காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று வனத்துறை அதிகாரிகளிடம் கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்