மைனர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் விதிகளில் திருத்தம் வேண்டும்; மத்திய அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை
|மைனர்களுக்கு பாஸ்போர்ட்டு வழங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றுக்கான விதிகளில் திருத்தம் வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். அவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான். குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார். மேலும், அவர் விவாகரத்து கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் அவர் தனது மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்வதற்கு முடிவு செய்தார். அவரது மகனுக்கு பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து இருந்தார். அவரது மகன் மைனர் என்பதால் பெற்றோர் இருவரும் கையெழுத்திட்டால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர் தனது மகனுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடுமாறு கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, மனுதாரரின் மகனுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு அவனது பெற்றோர் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்பது சட்டமாகும். இதுபோன்று விவாகரத்து கேட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் தம்பதியின் பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு சட்ட சிக்கல் ஏற்படுகிறது.
எனவே மைனர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது மற்றும் திருத்தம் செய்வது போன்ற விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டியது கட்டாயம் என கூறினார்.