< Back
தேசிய செய்திகள்
திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
தேசிய செய்திகள்

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

தினத்தந்தி
|
21 Dec 2023 9:43 PM IST

இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

புதுடெல்லி,

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நாடாளுமன்ற நிலைக்குழு (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த 3 மசோதாக்களும் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று 3 திருத்தப்பட்ட சட்டங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நீண்ட நேரம் விவாதம் நடத்தினார். இதன் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் 3 மசோதாக்களும் நிறைவேறின.இதையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் தேர்வுக்குழு நியமன மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பபட உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இச்சூழலில் எவ்வித எதிர்ப்பும் இன்றி அரசின் முக்கிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

மேலும் செய்திகள்