போலீசாரை தாக்கிய ரவுடி கைது; தந்தை மீதும் வழக்குப்பதிவு
|போலீசாரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது தந்தை மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா தோடர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பைசல் (வயது 33). பிரபல ரவுடி ஆவார். இவர் மீது பஜ்பே, மூடபித்ரி, அஜேகரு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் அவர் மீது நிலுவையில் இருந்த வழக்குகள் மீண்டும் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, பைசலுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து கோா்ட்டு உத்தரவின்பேரில் மூடபித்ரி போலீசார் அவரை கைது செய்வதற்காக, அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பைசல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். மேலும், அவர் போலீஸ்காரர் ஒருவரை தாக்கியுள்ளார்.
இதில் போலீஸ்காரருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதற்கிடையே பைசலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். பிடிக்க சென்ற போலீசாரை தாக்கியதாக பைசல் மீது மேலும், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ேமலும், போலீசாருக்கு இடையூறு செய்ததாக கூறி அவரது தந்தை ஹமீது மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.