பஞ்சாப்: முதல்-மந்திரியின் எச்சரிக்கையை தொடர்ந்து அரசு அதிகாரிகள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்
|வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவந்த குடிமைப் பணி அதிகாரிகள் தங்களது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் போக்குவரத்து அதிகாரி நரிந்தர் சிங் தலிவால், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு மாநில புலனாய்வு அமைப்பினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்கு மாநில குடிமைப் பணி அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. மேலும், கடந்த 9-ந்தேதி முதல், மாநிலத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு தற்செயல் விடுப்பு எடுத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டடது.
அதன்படி, மாநிலத்தின் அனைத்து அரசு அதிகாரிகளும், திங்கள்கிழமை முதல் மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களின் போராட்டத்திற்கு வருவாய்த் துறை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாநிலத்தில் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோ புதன்கிழமை(இன்று) மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்திருந்த காலக்கெடு நெருங்கி வந்த நிலையில், பஞ்சாப் குடிமைப் பணி அதிகாரிகள் தங்களின் விடுப்பெடுக்கும் போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டு பணிக்குத் திரும்புவதாக அறிவித்தனர்.