< Back
தேசிய செய்திகள்
காய்கறிகள், பழங்கள் விலையை தொடர்ந்து பெங்களூருவில் பூக்கள் விலையும் கிடுகிடு உயர்வு
தேசிய செய்திகள்

காய்கறிகள், பழங்கள் விலையை தொடர்ந்து பெங்களூருவில் பூக்கள் விலையும் கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

காய்கறிகள், பழங்கள் விலையை தொடர்ந்து பெங்களூருவில பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.1,500-ம், கனகாம்பரம் கிலோ ரூ.2,000-மும் விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூரு:

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் இன்னும் போதிய மழை பெய்யாமல் உள்ளது. போதிய மழை இல்லாததால் காய்கறிகள், பழங்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து பழங்கள், பருப்புகள் மற்றும் உணவு தானியங்களின் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பழங்கள், காய்கறிகளை தொடர்ந்து பெங்களூருவில் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் பருவமழை பெய்யாததாலும், கடும் வெயில் வாட்டி வதைப்பதாலும் பூக்கள் சாகுபடி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளது. பெங்களூரு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரையும், கனகாம்பரம் கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களை மேலும் துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது கன்னட ஆடி மாதம் நடப்பதால், விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் மக்கள் பூக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. தினசரி பூஜைக்கு கூட பூக்கள் வாங்க மக்கள் தயங்குகிறார்கள்.

அடுத்த மாதம் முதல் பண்டிகை மற்றும் விஷேச நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்