< Back
தேசிய செய்திகள்
தனி மாநில அந்தஸ்து பெறுவதே கொள்கை- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி
தேசிய செய்திகள்

தனி மாநில அந்தஸ்து பெறுவதே கொள்கை- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி

தினத்தந்தி
|
24 Aug 2022 5:52 AM IST

தனி மாநில அந்தஸ்து பெறுவது தான் கொள்கை. எனவே மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுவை சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

பொறுமை அவசியம்

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கத்தக்க கருத்துகளை கூறியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகால ஆட்சி எப்படி இருந்தது? என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரப்பகிர்வும் மாறி இருந்தது. இதை சரிசெய்ய வேண்டும். மத்திய அரசிடம் நாம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய கேட்டுள்ளோம். இல்லாவிட்டால் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவும் கேட்டுள்ளோம்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆரம்பிக்கும்போதே எங்கள் கொள்கை புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவதுதான். அது வந்தால்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும். இப்போதும் அதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இன்னும்கூட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம். இதில் நாம் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். அதேநேரத்தில் நமது கோரிக்கையை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

நிர்வாகத்தில் சங்கடம்

கவர்னர் தனது உரையில் நமது நிதியாதாரம் என்ன? என்பது குறித்து சுட்டிக்காட்டி உள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துகளுடைய ஆட்சி உள்ளது என்பதால் மக்களுக்கான திட்டங்களை செய்யலாம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்போதோ வந்தது. ஆனால் அதில் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது ரூ.1,000 கோடி திட்டத்தில் ரூ.3 கோடியே 62 லட்சம் மட்டும் செலவிடப்பட்டிருந்தது. இப்போது அந்த திட்டத்தை விரைவுபடுத்தி உள்ளோம். நிர்வாகத்தில் நிறைய சங்கடங்கள் உள்ளன. கோப்புகளும் திரும்பி வருவது போன்ற குறைகளும் உள்ளது. திட்டங்கள் விரைவாக வரவேண்டும் என்பதில் எம்.எல்.ஏ.க்கள் வேகம் காட்டுகிறார்கள்.

கேட்ட நிதி கிடைக்கும்

வரும் காலத்தில் நிர்வாக நிலைகள் மாறிட நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசும் இதற்கு ஒத்துழைப்பு அளித்து நாம் கேட்ட நிதியை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மூடப்பட்ட ஆலைகளை திறந்து நடத்தும் எண்ணம் உள்ளது. ஆனால் இப்போது செயல்படும் ஆலைகளும் மூடப்படும் சூழல் உள்ளது. மத்திய அரசிடம் கேட்டுள்ள நிதி கிடைத்தால் திட்டங்களை விரைவாக செயல் படுத்தலாம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

மேலும் செய்திகள்