சித்தராமையாவுக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற பிரியாணியை தடுத்து நிறுத்திய போலீசார்; 'பென்ஸ்' காரில் எடுத்த செல்ல அனுமதித்ததால் பரபரப்பு
|சித்தராமையாவுக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற பிரியாணியை தடுத்து நிறுத்திய போலீசார்
பெங்களூரு:
பக்ரீத் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் தங்களுக்கு வேண்டியவர்கள், நண்பர்களுக்கு பிரியாணி வழங்கி வந்தனர். மேலும் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள், தங்களின் முஸ்லிம் நண்பர்களிடம் பிரியாணி கேட்பதையும் பார்க்க முடிந்தது. இந்த பக்ரீத் 'பிரியாணி'யை மையமாக வைத்து சமூக வலைத்தளங்களில் சுவாரசியமான விவாதமும் நடந்தது. இந்த நிலையில், மந்திரி ஜமீர்அகமதுகானின் ஆதரவாளர்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு பிரியாணி வழங்க முடிவு செய்தனர். அதன்படி பிரியாணியை ஆட்டோவில் வைத்து சித்தராமையாவின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். சித்தராமையாவுக்கு ஜமீர்அகமதுகான் சார்பில் பிரியாணி கொண்டு வந்திருப்பதாக கூறியும் போலீசார் ஆட்டோவை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஜமீர்அகமதுகானின் ஆதரவாளர்கள் அதே பிரியாணியை 'பென்ஸ்' காரில் வைத்து சித்தராமையா வீட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது போலீசார் அந்த காரை உள்ளே செல்ல அனுமதித்தனர். அதாவது, ஆட்டோவில் ெகாண்டு செல்லப்பட்ட பிரியாணியை தடுத்து நிறுத்திய போலீசார், காரில் எடுத்து செல்லப்பட்டபோது அனுமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.