< Back
தேசிய செய்திகள்
எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தேசிய செய்திகள்

எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தினத்தந்தி
|
1 Oct 2023 1:56 AM IST

கடந்த ஓராண்டாக எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய தாவணகெரேவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தை சேர்ந்தவர் சித்தராமையா. இவர் இலக்கியவாதி ஆவார். மேலும் பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் அவரை கொலை செய்ய உள்ளதாக மிரட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தராமையா இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கடந்த ஓராண்டுகளில் மட்டும் பேராசிரியர்கள் மருலசித்தப்பா, வசுந்தரா பூபதி, வீரபத்ரப்பா உள்பட ஏராளமான இலக்கியவாதிகளுக்கும் மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதுதொடர்பாக பெங்களூரு சஞ்சய்நகர், பசவேஷ்வர்நகர், கோட்டூர், சித்ரதுர்கா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மிரட்டல் கடிதங்கள் அனைத்தும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே தங்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீஸ் துறை மந்திரி பரமேஸ்வரை சந்தித்து அவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து நடத்திய தீவிர விசாரணையின்பேரில் தாவணகெரேவை சேர்ந்த பாஸ்கர் ராவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பேராசிரியர்கள் அனைவருக்கும் மிரட்டல் கடிதத்தை தான் அனுப்பியதை அவர் ஒப்பு கொண்டார்.

இதையடுத்து அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்துத்துவாவுக்கு எதிராக கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு தான் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கூறினார். அவரிடம் இருந்து கூடுதல் தகவல்களை போலீசார் பெறுவதற்கு போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்