ஓய்வூதிய பலன்களை சிறுமிகளின் கல்விக்கு நன்கொடையாக அளித்த நபர்; பாராட்டி பேசிய பிரதமர் மோடி
|ஓய்வூதிய பலன்களை சிறுமிகளின் கல்விக்கு நன்கொடையாக அளித்த நபரை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பாராட்டி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 89வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சி நியூஸ், டி.டி. நியூஸ், பி.எம்.ஓ. மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் யூடியூப் சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் இந்தி ஒலிபரப்பிற்கு பிறகு ஏ.ஐ.ஆர்., பிராந்திய மொழிகளிலும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நம்மிடம் எதிர்பார்ப்பதற்கும் கூடுதலாக இந்த சமூகத்திற்கு நாம் சேவை செய்யும் மந்திரம் என்பது நம்முடைய வாழ்வின் மதிப்புகளின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த மந்திரம், நமது நாட்டின் எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கை லட்சியம் ஆகவுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் மர்காபுரம் பகுதியில் வசிக்கும் ராம் பூபால் ரெட்டி ஜி என்பவரை பற்றி எனக்கு தெரிய வந்தது.
அவர் ஓய்வு பெற்ற பின் தனக்கு கிடைத்த அனைத்து தொகையையும் பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக அளித்து விட்டார்.
அவர் 100 மகள்களுக்கு சுகன்ய சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் கணக்குகளை தொடங்கியுள்ளார். 25 லட்சத்திற்கும் கூடுதலான தொகையை அதில் செலுத்தியுள்ளார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அறப்பணிகளில் பங்காற்றும் சிலரால் இந்திய சமூகத்தின் மதிப்புகள் உயர்ந்து காணப்படுகிறது. அது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைவதுடன், நாமும் மக்கள் நல பணிகளில் ஈடுபட வேண்டும் என்று செயல்பட தூண்டுகிறது என அவர் கூறியுள்ளார்.