கர்நாடக முதல்-மந்திரி யாரென கட்சி மேலிடம் முடிவு செய்யும்; மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
|கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் என மல்லிகார்ஜூன கார்கே பேட்டியில் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் முனைப்புடன் உள்ளது. அக்கட்சி, 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதனால், 113 என்ற பெரும்பான்மை இடங்களை விடவும் கூடுதலான எண்ணிக்கையை காங்கிரஸ் கொண்டு உள்ளது.
இந்த தேர்தலில், கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த. வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காங்கிரஸ் கட்சியின் பிரதேச கமிட்டி தலைவரான டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்று உள்ளார்.
இதேபோன்று, வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் வி. சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளார்.
இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது. முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.
இந்த சூழலில் அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டியில், கர்நாடக மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்து விட்டனர். ஆட்சி அதிகாரத்திற்கு காங்கிரசை திரும்ப கொண்டு வந்து விட்டனர். நாங்கள் மந்திரி சபை அமைத்த பின்னர், தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த அனைத்து 5 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவோம் என கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி கூட்டம் இன்று நடைபெறும். இதன் அறிக்கை கட்சி மேலிடத்திற்கு வழங்கப்படும். அதன்பின்னர் அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்கும் என கூறியுள்ளார்.