திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக தொடங்கியது
|திருப்பதி ஏழுமலையான் ேகாவிலில் பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
திருமலை,
திருமலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அஷ்டலட்சுமி, தசாவதார மண்டபங்களில் நேற்று பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார். உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கில் எழுந்தருளினர். மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு நான்கு மாடவீதிகள் வழியாக மாலை 5.30 மணியளவில் ஊர்வலமாக வந்து பரிணயோற்சவ மண்டபத்தை அடைந்தனர்.
மண்டபத்தில் புதுமணத் தம்பதிகளான சாமி, தாயார்களை எதிர் எதிரே வைத்து மாலைகள், புது வஸ்திரங்களை அணிவித்து பரிணயோற்சவம் நடத்தப்பட்டது. அதன்பின் சாமிக்கு கொலு ஆஸ்தானம் மற்றும் ஊஞ்சல் ேசவை நடந்தது.
பத்மாவதி பரிணயோற்சவ மண்டபம் ஆப்பிள், அன்னாசி, சோளக்கதிர்கள், ஆஸ்திரேலிய ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சாமந்தி, வெட்டி வேர், வாடாமல்லி, நான்கு வண்ண ரோஜாக்கள் உள்பட பல்வேறு மலர்கள் மண்டபத்தை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 3 டன் பழங்கள், 1.5 டன் பாரம்பரிய மலர்கள், 30 ஆயிரம் கட் பிளவர்ஸ் பயன்படுத்தப்பட்டன.
கிறிஸ்டல் பந்துகளும் சர விளக்குகளும் இடை இடையே தொங்க விடப்பட்டு இருந்தன. சிறிய அளவிலான கிருஷ்ணா சிலைகள், வெண்ணெய் பானைகள், தாமரைகள் மற்றும் மயில்கள் ஆகிய கலை உருவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
சென்னையைச் சேர்ந்த 30 நிபுணர்கள் 15 நாட்களும், திருப்பதி தேவஸ்தான பூங்கா இலாகா ஊழியர்கள் 100 பேர் 2 நாட்களும் பூங்கா இலாகா துணை இயக்குனர் சீனிவாசுலுவின் வழிகாட்டுதல் படி வசீகரமான முறையில் மண்டபத்தை அலங்கரித்தனர். உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புனே ஸ்ரீவெங்கடேஸ்வரா அறக்கட்டளை சார்பாக பரிணயோற்சவ மண்டபத்தின் அலங்காரத்துக்காக ரூ.24 லட்சம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.