< Back
தேசிய செய்திகள்
காப்பீடு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.2 கோடி தங்கம் கொள்ளை போனதாக நாடகமாடிய நகைக்கடை உரிமையாளர் கைது
தேசிய செய்திகள்

காப்பீடு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.2 கோடி தங்கம் கொள்ளை போனதாக நாடகமாடிய நகைக்கடை உரிமையாளர் கைது

தினத்தந்தி
|
1 Aug 2023 12:15 AM IST

பெங்களூருவில் காப்பீடு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.2 கோடி தங்கம் கொள்ளை போனதாக நாடகமாடிய நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு நகரத் பேட்டையில் நகைக்கடை நடத்தி வருபவர் ராஜு ஜெயின். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், பெங்களூருவில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரிகளிடம் இருந்து தங்க கட்டிகளை பெற்று, அவற்றை தங்க நகைகளாக மாற்றி விற்பனை செய்வதை ராஜு ஜெயின் செய்து வருகிறார். கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி இரவு தனது உறவினர்கள் 2 பேரிடம் 3 கிலோ 780 கிராம் தங்க நகைகளை அவர் கொடுத்தார்.

அந்த நகைகளை வியாபாரி ஒருவரிடம் கொடுத்து விட்டு வரும்படி ராஜு ஜெயின் தெரிவித்தார். அதன்படி, அவர்கள் 2 பேரும் தங்க நகைகளை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றனர். காட்டன் பேட்டை அருகே மைசூரு ரோடு மேம்பாலத்தில் இரவு 7.30 மணியளவில் செல்லும் போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ராஜு ஜெயினின் உறவினர்களை தாக்கிவிட்டு 3¾ கிலோ தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்டது.

இதுகுறித்து ராஜு ஜெயின் அளித்த புகாரின் பேரில் காட்டன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசாருக்கு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ராஜு ஜெயினின் உறவினர்களான 18 வயது நிரம்பாத வாலிபர்களை பிடித்து விசாரித்த போதும், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து, ராஜு ஜெயினை பிடித்து தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, நகைகள் கொள்ளை போகவில்லை என்றும், நாடகமாடியதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து காட்டன் பேட்டை போலீசார் ராஜு ஜெயினை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது நகரத் பேட்டையில் நகைக்கடை நடத்தி வரும் ராஜு ஜெயின் தன்னுடைய கடைகளில் இருக்கும் தங்க நகைகளுக்கு காப்பீடு செய்திருந்தார். இதனால் வியாபாரிக்கு கொடுக்க எடுத்து சென்ற 3¾ கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக கூறினால், காப்பீடு பணமும் கிடைக்கும், தங்க நகைகளும் தன்னிடமே இருக்கும், அதனை விற்று பணம் சம்பாதித்து கொள்ளலாம் என்று ராஜு ஜெயின் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தனது உறவினர்கள் 2 பேரை அழைத்து கொள்ளையை எப்படி அரங்கேற்ற வேண்டும் என்று ராஜு ஜெயின் பயிற்சி அளித்துள்ளார். பின்னர் கடந்த மாதம் 12-ந் தேதி கடையில் இருந்து 3¾ கிலோ தங்க நகைகள் இருந்த பாக்சுகளை எடுத்து 2 பேரிடமும் ராஜு ஜெயின் கொடுத்துள்ளார். அந்த நகைகள் இருந்த பாக்சுகளை எடுத்து 2 பேரும் பைகளில் அடுக்கி வைத்துள்ளனர். இதனை கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும்படி நடந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கடையில் இருந்து தங்க நகைகளை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்வதையும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும்படி ராஜு ஜெயின் செய்திருக்கிறார். அதன்பிறகு, மைசூரு ரோடு மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நகைகளை எடுத்துவிட்டு பாக்சுகளை அங்கேயே வீசி உள்ளனர். தங்க நகைகளை ஒரு பையில் வைத்து கொண்டு, மற்றொரு வாகனத்தில் போட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கொள்ளை நடந்த இடத்தில் இருந்தே ராஜு ஜெயினை 2 பேரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஏனெனில் கொள்ளை நடந்ததும் 2 பேரும் தனக்கு தகவல் தெரிவித்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு செய்துள்ளனர். அதன்பிறகு, 3¾ கிலோ தங்க நகைகளையும் 2 பேரும் ராஜு ஜெயினிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

இதன்பிறகு தான் காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ராஜு ஜெயின் புகார் அளித்திருந்தார். காப்பீடு பணத்திற்காக திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும், கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தால், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று 2 பேருக்கும் ராஜு ஜெயின் பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.

அவரது வீடு, கடையில் இருந்து 3¾ கிலோ தங்க நகைகளை காட்டன் பேட்டை போலீசார் மீட்டு இருந்தனர். கைதான ராஜு ஜெயின் மீது காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது.

மேற்கண்ட தகவலை போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியின் போது தெரிவித்து இருந்தார். மேலும் ராஜு ஜெயின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த நகைகளை போலீஸ் கமிஷனர் தயானந்த், மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சதீஸ்குமார் பார்வையிட்டார்கள்.

தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான 'பாபநாசம்' படத்தில் கொலையை மறைப்பதற்காக, போலீசார் எவ்வாறு கேள்வி கேட்பார்கள், அதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று தனது குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் பயிற்சி அளித்து இருப்பார். அதேபாணியில் ராஜு ஜெயின் தங்க நகைகள் கொள்ளை பற்றி போலீசார் எப்படி விசாரிப்பார்கள், அதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று தனது உறவினர்களான 2 சிறுவர்களுக்கும் பயிற்சி அளித்தது ெதரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்