< Back
தேசிய செய்திகள்
பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மாணவர்களை அழைத்து வர கூறிய உத்தரவு ரத்து; பள்ளி கல்வித்துறை தகவல்
தேசிய செய்திகள்

பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மாணவர்களை அழைத்து வர கூறிய உத்தரவு ரத்து; பள்ளி கல்வித்துறை தகவல்

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு, பள்ளி மாணவர்களை அழைத்து வர கூறிய பள்ளி கல்வி துறையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பிரதமர் வருகை

பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 2-வது முனையம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும், அந்த வளாகத்தில் 108 அடி உயர கெம்பேகவுடா உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் மற்றும் கெம்பேகவுடா சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை (ெவள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு வர உள்ளார். அன்றைய நாளில் அவர் சென்னை-மைசூரு வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பெங்களூரு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் இருந்து குறிப்பிட்ட மாணவர்களை பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என மாநில பள்ளி கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

உத்தரவு ரத்து

மேலும், மாணவர்களை பாதுகாப்பான முறையில் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து, பின்னர் மீண்டும் அழைத்து செல்வது பள்ளி, கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பு என கூறப்பட்டு இருந்தது. பள்ளி கல்வித்துறையின் இந்த அறிக்கைக்கு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மோடி கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் மாணவர்களை அழைத்து வர கூறிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அந்தந்த பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது.

மேலும் செய்திகள்