ஒழுங்காற்று குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்: குமாரசாமி ஆவேசம்
|வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதப்பட்ட மரண சாசனம் என்று குமாரசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
காவிரியில் தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனடி நீர் திறக்கும்படி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இது கன்னடர்கள் மீது எழுதப்பட்ட மரண சாசனம். காவிரி அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறுகிறார்.
இதற்கு எதிராக நமது அதிகாரிகள், எங்களிடம் நீரே இல்லை என்று சொல்கிறார்கள். இன்னொரு அதிகாரி, ஒழுங்காற்று குழுவின் உத்தரவால் நமக்கு 2½ டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) மிச்சமாவதாக சொல்கிறார்.
இந்த அரசின் தோல்விகளை தமிழக அரசு பயன்படுத்தி கொள்கிறது. கர்நாடகம் குடிநீருக்கு தண்ணீர் கேட்கிறது. ஆனால் தமிழகமோ பயிர் சாகுபடிக்கு நீர் கேட்கிறது. அங்கு சுயநலம் உள்ளது. இங்கு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மனிதநேயத்திற்கு எதிராக இருக்கும் தமிழகத்தின் நடையை ஒப்புக்கொள்ள முடியாது. அந்த மாநிலத்திற்கு எதிராக போராடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.
கூட்டாட்சி நடைமுறையில் அனைவரும் சமமானவர்கள். இடர்பாட்டு காலத்தில் நீரை எவ்வாறு பங்கிட்டு கொள்வது என்பது குறித்து சுப்ரீம் கோா்ட்டு தனது தீர்ப்பில் கூறவில்லை. அதனால் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு இடர்பாட்டு சூத்திரத்தை உடனே வகுக்க வேண்டும். அந்த சூத்திரம் வகுக்கும் வரை நீர் திறக்க மாட்டோம் என்று அரசு உறுதியாக சொல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.