அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
|அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கில், அந்த பத்திரிகை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதைப்போல மராட்டியத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் கடும் புயலை கிளப்பியது. அந்த வகையில் மக்களவை காலையில் கூடியதும் இந்த பிரச்சினையை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் இந்த விவகாரத்தில் 3 ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, இது குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் புகழுக்கு களங்கம் விளைவிக்க அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
ஆனால் அவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததால் அமளி தீவிரம் அடைந்தது. இதனால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி ஓயவில்லை. இந்த அமளிக்கு மத்தியிலும் எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால், காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
அப்போது அவையின் மையப்பகுதியில் நின்றிருந்த தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், இருக்கைகளில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி.க்களை தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைத்ததை பார்க்க முடிந்தது.
உடனே காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தனது இருக்கையில் இருந்து எழுந்து அவையின் மையப்பகுதிக்கு சென்றதுடன், இருக்கையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி.க்களையும் அவையின் நடுப்பகுதிக்கு அழைத்தார்.
இவ்வாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடரவே அவையில் பரபரப்பு ஏற்பட்டது. எனவே மக்களவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜூன கார்கே, தீபிந்தர் சிங் ஹூடா, சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், ராகவ் சத்தா ஆகியோரின் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுகளை நிராகரிப்பதாக பூஜ்ஜிய நேரத்தின் போது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
மாறாக, அவையின் பூஜ்ஜிய நேர அலுவல்களை தொடங்கினார். அதன்படி பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை உறுப்பினர்கள் அவையில் எழுப்பினர்.
இதில் முக்கியமாக இலங்கைக்கு வரும் சீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஏற்பட உள்ள அபாயம் குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எடுத்துரைத்தார். இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் முதன் முதலாக மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேர அலுவல்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.