சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை - அனுராக் தாக்கூர் பேட்டி
|சி.ஏ.ஏ சட்டம் குடியுரிமை வழங்கப்படும், பறிக்கப்படாது என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதஅடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை கடந்த 2019- ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன்படி, குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளும் முதல் மந்திரிகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சி.ஏ.ஏ. குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியதாவது:-
சி.ஏ.ஏ.வை பொறுத்தவரை முன்பே உருவாக்கப்பட்டதுதான் என்று சொல்லவேண்டும், அதனைதான் நாங்கள் நேற்று அறிவித்தோம். 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ சட்டம் குடியுரிமை வழங்கப்படும், பறிக்கப்படாது. வன்கொடுமைகளை எதிர்கொள்ளும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றார்.