இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் பாகிஸ்தான் டிரோன்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிப்பு
|இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்த டிரோன்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 311 ஆக அதிகரித்துள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப் எல்லையில் அனுமதியின்றி பறந்த ஆளில்லா விமானத்தை(டிரோன்) எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். மேலும் கைப்பற்றப்பட்ட டிரோனில் பதிவான விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்த டிரோன்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 311 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 104 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அத்துமீறி நுழைந்த டிரோன்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக பஞ்சாப் எல்லையில் 164 டிரோன்களும், ஜம்முவில் 35 டிரோன்களும், ராஜஸ்தானில் 32 டிரோன்களும் அத்துமீறி நுழைந்துள்ளன. இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களில் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.