< Back
தேசிய செய்திகள்
2024-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும்; மந்திரி உமேஷ்கட்டி பரபரப்பு பேட்டி

மந்திரி உமேஷ்கட்டி

தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும்; மந்திரி உமேஷ்கட்டி பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
24 Jun 2022 4:16 AM IST

2024-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும் என்று மந்திரி உமேஷ்கட்டி கூறியுள்ளார்.

பெலகாவி:

பொதுவினியோகம், உணவு மற்றும் வனத்துறை மந்திரி உமேஷ்கட்டி பெலகாவியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உள்கட்டமைப்பு வசதிகள்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படுகிறது. புதிதாக மராட்டியத்தில் 3 மாநிலங்கள், கர்நாடகத்தில் 2, உத்தரபிரதேசத்தில் 4 என நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பெலகாவியில் விகாச சவுதா உள்ளது. தார்வார் ஐகோர்ட்டு கிளை இருக்கிறது. பெலகாவியில் நுகர்வோர் கோர்ட்டு அமைக்கப்படுகிறது. மாநிலம் பிரிக்கப்பட்டால் வட கர்நாடகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். நாம் அனைவரும் சேர்ந்து வட கர்நாடகத்தை தனி மாநிலமாக ஆக்குவோம். பெங்களூரு முழுவதுமாக நிரம்பிவிட்டது.

பிரிக்கப்பட வேண்டும்

பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இருந்து எனது வீடு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வீட்டில் இருந்து விதான சவுதாவுக்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. அதனால் வளர்ச்சியை பரவலாக்க வேண்டியது அவசியம். அதனால் கர்நாடகம் அவசியம் பிரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு உமேஷ்கட்டி கூறினார்.

மந்திரி உமேஷ் கட்டி இதே கருத்தை தட்சிண கன்னடா மாவட்டத்திலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உமேஷ்கட்டியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்