< Back
தேசிய செய்திகள்
பிரபல ரவுடியை போலீசார்  துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்
தேசிய செய்திகள்

பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

சிவமொக்கா-

சிவமொக்கா ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர் சைபுல்லா (வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது துங்கா நகர், ஜெயநகர், தொட்டபேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், ஜெயநகர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சைபுல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரை ஜெயநகர் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் சிவமொக்கா அருகே உள்ள தொட்டவந்தி வனப்பகுதியில் சைபுல்லா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் சச்சின், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த சைபுல்லாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து போலீசார் 2 பேரையும் தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் நவீன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தார். சைபுல்லா மீண்டும் போலீசாரை தாக்க வந்தார். இதனால் நவீன், துப்பாக்கியால் சைபுல்லாவின் கால்களை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார்.

இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். இதையடுத்து சைபுல்லாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் செய்திகள்