< Back
தேசிய செய்திகள்
இரவு நேரத்தில் குரைத்து உறக்கத்திற்கு இடையூறு: நாய்க்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பக்கத்துவீட்டுக்காரர்
தேசிய செய்திகள்

இரவு நேரத்தில் குரைத்து உறக்கத்திற்கு இடையூறு: நாய்க்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பக்கத்துவீட்டுக்காரர்

தினத்தந்தி
|
23 Nov 2022 2:49 AM IST

ராஜாஜிநகர் அருகே இரவு நேரத்தில் குரைத்து உறக்கத்திற்கு இடையூறு கொடுத்ததால் பக்கத்து வீட்டுக்காரர் நாய்க்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ராஜாஜிநகர்:

வளர்ப்பு நாய்

பெங்களூரு ராஜாஜிநகர் மோடி ஆஸ்பத்திரி சாலையில் சரோஜா என்பவர் தனது மகள்களுடன் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவரது வீட்டின் அருகே மதுபான கடை உள்ளதால், இரவு நேரங்களில் மதுபோதையில் யாரும் வீட்டில் உள்ளே நுழைந்துவிட கூடாது என்பதற்காக அந்த நாயை வீட்டு வாசலில் கட்டி வைத்து வந்தார்.

இந்த நிலையில் அவரது நாய் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர் களை கண்டு குரைத்து கொண்டே இருந்துள்ளது. இதனால் அருகில் இருந்த வீட்டாருக்கு இடையூறாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அவரது நாய் வீட்டின் முன்பு அசைவின்றி கிடந்தது. மேலும் அதன் அருகில் சாப்பிடும் ரொட்டியும் கிடந்தது.

விஷம் வைத்து கொல்ல முயற்சி

இதையடுத்து உடனடியாக சரோஜா, நாயை அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். நாயை பரிசோதனை செய்த டாக்டர், நாய்க்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சரோஜாவுக்கு வீட்டின் அருகே வசித்து வரும் சேதுராமன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் இதுகுறித்து மகாலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரித்ததில், இரவு நேரங்களில் நாய் தொடர்ந்து குரைத்து உறக்கத்திற்கு இடையூறாக இருந்து வந்ததால் சேதுராமன் நாய்க்கு ரொட்டியில் விஷம் வைத்து கொல்ல முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்