< Back
தேசிய செய்திகள்
பாரதத்தின் தேசிய மதம் சனாதன தர்மம் - யோகி ஆதித்யநாத் பேச்சு
தேசிய செய்திகள்

'பாரதத்தின் தேசிய மதம் சனாதன தர்மம்' - யோகி ஆதித்யநாத் பேச்சு

தினத்தந்தி
|
13 Sept 2023 11:50 PM IST

சனாதனத்தின் நிலைத்தன்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

லக்னோ,

சனாதன தர்மம் என்பது பாரதத்தின் தேசிய மதம் என்றும், அதனை அழிக்க முடியாது என்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;-

"பண்டைய காலத்தில் இருந்தே சனாதன தர்மத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று வரை இந்தியாவில் வசிக்கும் சிலர் சனாதனத்தை அவமதித்து வருகிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது. சனாதனம் என்பது நம் பாரதத்தின் தேசிய மதம். அதன் நிலைத்தன்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது.

ராவணன் கூட இறைவனை எதிர்த்தார். ஆனால், தனது ஆணவத்தால் ராவணன் அழிந்தார். முகாலய பேரரசர் பாபர், ராமர் கோவிலை சிதைக்க நினைத்தார். ஆனால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படுகிறது.

இந்து என்பது மதம் சார்ந்த வார்த்தை அல்ல அது இந்தியர்களின் கலாச்சார அடையாளம். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செல்வோர் அங்கு 'இந்துக்கள்' என்றே அழைக்கப்படுகின்றனர்.

அண்மையில் இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தான் ஒரு பெருமையான இந்து என்று சொல்கிறார். அவர் பசுவை வணங்குவதையும், கோவிலுக்குச் செல்வதையும், ஜெய் ஸ்ரீராம் சொல்வதையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஏனெனில், அவரது வேர் சனாதனத்தில் இருக்கிறது."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்