மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - மத்திய அரசு சுற்றறிக்கை
|மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் உயிரிழந்து கிடந்தார். அரைநிர்வாண கோலத்தில் கடந்த 9ம் தேதி அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் , அதற்கு முந்தைய நாள் (ஆக.8) இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவக்கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில்,
* நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொள்கைகளை வகுக்க வேண்டும்.
* விரிவான நடவடிக்கை அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்திற்கு 24 மணி நேரத்தில் அனுப்ப வேண்டும்.
* மருத்துவ மாணவர்களுக்கு எதிரான எந்த வன்முறை குறித்தும் கல்லூரி நிர்வாகம் உடனே விசாரிக்க வேண்டும்.
* ஊழியர்கள் வளாகத்தில் பாதுகாப்பாக செல்ல முக்கிய பகுதிகளில் சிசிடிவி நிறுவ வேண்டும்.
* வார்டுகள், தங்கும் விடுதி, குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்புக்கு இரு காவலர்கள் இருக்க கொள்கை வகுக்க வேண்டும்.
* முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் சுற்றிக்கை வெளியிட்டுள்ளது.