தெலுங்கு திரையுலகில் பேஷன் டிசைனராக இருந்த பிரதியுஷா மர்ம மரணம்
|தெலுங்கு திரையுலகில் பேஷன் டிசைனராக இருந்த பிரதியுஷா கேரிமெல்லா குளியலறையில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகில் பேஷன் டிசைனராக இருந்து வந்தவர் பிரதியுஷா கேரிமெல்லா. தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது குடியிருப்பில் வசித்து வந்த அவர், குளியலறையில் நேற்று மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
அந்த அறையில் கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கொண்ட பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதனை அவர் சுவாசித்து இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பிரதியுஷா மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் என கூறியுள்ள போலீசார், எனினும் விசாரணை நடந்து வருகிறது. அதன்பின்னரே பிற விசயங்கள் தெரியவரும் என தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் படித்து முடித்துள்ள பிரதியுஷா, ஐதராபாத்தில் அதுசார்ந்த தொழிலில் ஈடுபட தொடங்கினார். கடந்த 2013ம் ஆண்டு முதல் பேஷன் டிசைனராக செயல்பட தொடங்கிய அவர் தொடர்ந்து முன்னேற்ற வழியில் நடை போட்டார்.
தெலுங்கு திரையுலகம் மற்றும் சில பாலிவுட் படங்களிலும் பல்வேறு பிரபல திரை நட்சத்திரங்களுக்கு அவர் பேஷன் டிசைனராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளது திரையுலகினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.