< Back
தேசிய செய்திகள்
ஸ்ரீநகரில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று நடக்கிறது..!
தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று நடக்கிறது..!

தினத்தந்தி
|
22 May 2023 9:49 AM IST

ஸ்ரீநகரில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று நடக்கிறது.

ஸ்ரீநகர்,

ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தலைப்புகளில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று (திங்கட்கிழமை) ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பின் அங்கமாக கடற்படை கமாண்டோக்கள், தேசிய பாதுகாப்பு படையினர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா மாநாடு ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இந்த பகுதியை மார்கோஸ் என்று அழைக்கப்படும் கடற்படையினர் தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளனர். நாடு முழுக்க இதுபோன்று 118 கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன.

சுற்றுலா தலைப்பில் மூன்றாவது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இதை தலைப்பில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஸ்ரீநகரில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த 60 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆண்டு பாஜக கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பின் திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் நடைபெறும் முதல் சர்வதேச நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்