< Back
தேசிய செய்திகள்
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!
தேசிய செய்திகள்

பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!

தினத்தந்தி
|
23 Jun 2023 12:40 PM IST

பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாட்னா,

அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கான கூட்டு வியூகத்தை வகுப்பதற்காக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத் பவார், அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரான், பகவந்த் சிங் மான், உத்தவ் தாக்கரே, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாயாவதி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாகவும், பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரள்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்திற்கு முக்கிய தலைவர்கள் வந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்