< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட குற்றவாளிகள் கைது
தேசிய செய்திகள்

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட குற்றவாளிகள் கைது

தினத்தந்தி
|
12 April 2024 11:28 AM IST

குற்றவாளிகள் இருவரும் மேற்கு வங்கத்தில் தலைமறைவாகி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மாதம் 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. தலைமறைவாகியுள்ள 2 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். என்.ஐ.ஏ.வால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய இருவரையும் பற்றி யாரேனும் துப்பு கொடுத்தால் தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே குண்டுவெடிப்பை நிகழ்த்த குற்றவாளிகளுக்கு வெடிப்பொருட்களை சப்ளை செய்ததாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு முஜாமில் ஷெரீப் என்பவரை பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியது முசபீர் உசேன் சாஜீப் என்றும், இதற்கான திட்டங்களை வகுத்து கொடுத்தது அப்துல் மதீன் அகமது தாகா என்பதும் அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, தீர்த்தஹள்ளியில் உள்ள முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய 2 பேரின் வீடுகளிலும், அங்குள்ள ஒரு செல்போன் கடையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவர்கள் இருவரும் மேற்கு வங்கத்தில் தலைமறைவாகி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இருவரையும் கைதுசெய்வதற்காக அதிகாரிகள் மேற்கு வங்கம் விரைந்தனர். இந்த நிலையில், கொல்கத்தா அருகே பதுங்கியிருந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய இருவரையும் இன்று அதிகாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்துள்ளனர். இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்