< Back
தேசிய செய்திகள்
மராட்டிய மாநில அமைச்சரவை நாளை மதியம் ஒரு மணிக்கு கூடுகிறது; முதல்-மந்திரி அறிவிப்பு
தேசிய செய்திகள்

மராட்டிய மாநில அமைச்சரவை நாளை மதியம் ஒரு மணிக்கு கூடுகிறது; முதல்-மந்திரி அறிவிப்பு

தினத்தந்தி
|
21 Jun 2022 10:14 PM IST

மராட்டிய மாநில அமைச்சரவை நாளை மதியம் ஒரு மணியளவில் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டு உள்ளார்.



புனே,



மராட்டிய மேல்சபைக்கான தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி மாறி ஓட்டு போட்டது இதற்கு காரணம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து, சிவசேனா தலைவர்களில் ஒருவரான மற்றும் மராட்டிய அமைச்சரவையில் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் சேர்ந்து 26 எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என மராட்டிய அரசியல் வட்டாரம் கூறுகிறது.

அவர்கள் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்று விட்டனர் என கூறப்படுகிறது. இதேபோன்று, 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் கூறினார்.

இது மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சூடு பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து, மராட்டிய சட்டசபை துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வாலை சிவசேனா தலைவர்கள் இன்று நேரில் சந்தித்தனர்.

அவர்கள், மராட்டிய சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கினர். ஷிண்டேவுக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநில அமைச்சரவை நாளை மதியம் ஒரு மணியளவில் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்