< Back
தேசிய செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு:  மந்திரி சகோதரரிடம் பணம் கொடுத்ததாக கூறியவர் கைது
தேசிய செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு: மந்திரி சகோதரரிடம் பணம் கொடுத்ததாக கூறியவர் கைது

தினத்தந்தி
|
6 Jun 2022 10:23 PM GMT

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் மந்திரி சகோதரரிடம் பணம் கொடுத்ததாக கூறியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் 2 போலீஸ்காரர்களும் சிக்கி உள்ளனர்.

பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் மந்திரி சகோதரரிடம் பணம் கொடுத்ததாக கூறியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் 2 போலீஸ்காரர்களும் சிக்கி உள்ளனர்.

தேர்வில் முறைகேடு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா, பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பாட்டீல் உள்பட 40-க்கும் மேற்பட்டோரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் தேர்வு எழுதிய 545 பேரும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்படி விசாரணைக்கு ஆஜரானவர்களிடம் இருந்து தேர்வுத்தாள் பறிமுதல் செய்யப்பட்டு தடய அறிவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மையம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

மந்திரிக்கு எதிராக போராட்டம்

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக ராமநகர் மாவட்டம் மாகடியை சேர்ந்த தர்ஷன் கவுடா என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் மந்திரி அஸ்வத் நாராயண் சகோதரரிடம் ரூ.80 லட்சம் கொடுத்ததாக கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் தர்ஷனை கைது செய்யாமல் போலீசார் விட்டுவிட்டனர்.

இந்த நிலையில் தேர்வு முறைகேட்டில் மந்திரி அஸ்வத் நாராயணுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் கூறியதால் தான் தர்ஷனை போலீசார் கைது செய்யாமல் விட்டுவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியது. மேலும் அஸ்வத் நாராயணுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டமும் நடத்தி இருந்தது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அஸ்வத் நாராயண் மறுத்து இருந்தார்.

3 பேர் கைது

இந்த நிலையில் தடய அறிவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த தர்ஷன் உள்பட 3 பேரின் தேர்வுத்தாள் நேற்று முன்தினம் சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்து இருந்தது. தர்ஷன் எலகங்கா நியூ டவுனில் தேர்வு எழுதியது தெரியவந்தது. இதனால் அவர் மீது எலகங்கா நியூ டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். மேலும் அவரை நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுபோல பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் மோகன்குமார், பெங்களூரு கலாசிபாளையா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஹரீஷ் ஆகியோரும் முறைகேடு செய்து சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் ராமமூர்த்திநகர், கோரமங்களா போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் நேற்று சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்